ஓம் நமசிவாய!சிவாயநம ஓம்!

திருச்சிற்றம்பலம்

திமிரி பாஷாண லிங்கம்

அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரர் திருக்கோயில் திமிரி - ஸ்தல வரலாறு .






ஞான பூமியான தமிழகம் எத்தனயோ ஆன்மீக அற்புதங்களை கொண்டது. அப்படிப்பட்ட அற்புதங்களில் ஒன்றுதான் தீராத நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி பாஷாண லிங்கம். கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்து அருள் பாலிக்கும் அரியதொரு தெய்வ சாட்சி, திமிரி ஸ்ரீ சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர்.

திமிரி பாஷாண லிங்கம் உருவான வரலாறு தெரிய வேண்டுமா ? அதற்கு நாம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜய நகர பேரரசுக்கு செல்ல வேண்டும்.

விஜய நகர பேரரசில் சிற்றரசர்களாக திம்மி ரெட்டி , பொம்மி ரெட்டி இருவரும் வேலூர்க் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். அவர்களது வழித்தோன்றலான சதாசிவராய மன்னர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லை (திமிரி) பகுதியில் பல நற்காரியங்கள் புரிந்தார். இன்றைய திமிரி, அன்று திவாகராயர் எல்லை என்று பெயர் பெற்று விளங்கியது. ஒரு சமயம் தொற்றுநோய் விஷகிருமிகளால் மக்கள் நோய்களுக்கு ஆளாகி அவதியுற்றனர். இரக்க குணமும் இறைபற்றும் மிக்க சதாசிவராயர் இதனைகண்டு வேதனையுற்றார். பிணியும், வறுமையும் தன் நாட்டிலிருந்து நீங்க வேண்டும் என்று விரும்பிய அவர் , உடனடியாக தமது அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்தார். பின்னர் தமது ராஜவைத்தியரான இராச பண்டித சிரோன்ம்னி, மந்திர வைத்திய கேசரி என்று புகழப்பட்ட கன்னிகா பரமேஸ்வரர் அந்தனரிடம் அதற்கான வழியை கண்டறிய ஆணையிட்டார்.

மன்னரின் அன்பான ஆணைப்படி அரசவை வைத்தியரும் 12 ஆண்டு காலம் உழைத்து, தன்வந்திரி வைத்திய முறையில் நவபாஷாணத்தில் ஒன்றான திமிரி பாஷாணத்தால் தெய்வாம்சமும் மருத்துவ குணமும் கலந்த சோமநாத ஈஸ்வர லிங்கத்தை வடிவமைத்துத் தந்தருளினார். திமிரி என்பதற்கு தீ என்ற பொருளும் உண்டு.



அதன் உயரம் 6 அங்குலம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி. 1379 ஆம் ஆண்டு தைத் திங்கள் திருவாதிரை நன்னாளில் திமிரி நகரின் கோட்டைப் பகுதியல் அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12வது பட்டம் சங்கராச்சாரியார் ஆசிர்வாதத்துடன் திமிரி பாஷாண லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆகம முறைப்படியும் சித்த மருத்துவ முறைப்படியும் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம் பக்தர்களுக்கு அருள்விருந்தை வழங்கியது! அதன் மருத்துவ குணங்கள் மிகுந்த அபிஷேக தீர்த்தம் அருமருந்தாய் விளங்கியது!.

மருத்துவ குணங்களை உள்ளடக்கிய இந்த லிங்கத்தின் அபிஷேக தீர்த்த பிரசாதம் இதய நோய், சிறுநீரக நோய், மன நோய், சரும நோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களை குணமாக்குகிறது. மருந்தும் ஈசனும் இணைத்து மருந்தீசராகி நோய் தீர்ப்பது அற்புதம்தானே! திமிரி லிங்கம் பாஷாணத்தால் உருவாக்கப்பட்டதல் புகையும் தன்மை கொண்டது ஆகையால் எப்போதும் லிங்கத்தின் மீது நீர் விழுமாறு செய்யப்பட்டது . அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொண்டவர் நலமும் வளமும் பெற்றனர்.


அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைகப்பட்ட அப்பகுதி திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் திமிரி நகரம் என்று பெயர் மாற்றம் கொண்டது!.

மக்கள் பிணிதீர்த்து மகிழ்வதைக் கண்ட சதாசிவராயர் பெருமகிழ்ச்சியடைந்தார். பக்திப் பரவசத்தில் நெகிழ்ந்தார்.

காலப்போக்கில் ஆற்காடு நவாப் படையெடுத்து வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றினான். புராதன சின்னங்களையும், ஆலயங்களையும் மொகலாயர் கொள்ளையிட்டனர். இந்த கொள்ளையிலிருந்து, தாம் அரும்பாடுபட்டு உருவாக்கிய அருள்நிறை பாஷாண லிங்கத்தை காக்க கன்னிகா பரமேஸ்வரர் முற்பட்டார்.

லிங்கத்தின் மீது தேன் மெழுகு பூசி வேதியியல் கலவையிலான கூர்ம (ஆமை) வடிவ கவசத்துள் மறைத்து எக்காலத்தும் அழியாத வண்ணம் புவியியல் தத்துவத்தின்படி முக்கோண பெட்டகத்துள் வைத்து ஆலயத்து திருக்குளத்தில் கி பி 1454இல் புதைத்து வைத்தார். பிறகு, மாற்றாரிடம் பிடிபடுவதை தவிர்க்க, அண்டை அரசான காஞ்சிக்கு அரச வைத்தியர் தம் குழுவினருடன் விரைந்தார்.

இதை அறிந்த முகலாய சிப்பாய்கள் இவர்களை கைது செய்து திமிரியை அடுத்த ஆணைமல்லூர் ஸ்ரீரேணுகாம்பாள் ஆலயத்தின் முன்பு கொண்டு வந்தனர். அவர்களை யானைக்காலால் இடறச் செய்தனர். உயிர் நீங்கும் தருணத்திலும் கன்னிகா பரமேஸ்வரர், 'மற்றொரு பிறவி இருக்குமேயானால் அதிலும் என் கையாலேயே பாஷாண லிங்கத்தை மீண்டும் எடுத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என்று அரனிடம் தியானித்துக் கொண்டார்.

பாஷாண லிங்கம் மறைந்து ஆண்டுகள் 500 ஓடி விட்டன. மனித குலத்தைக் காத்து அருள இறைவன் திருவுளம் கொண்டான் போலும். 1985 ஆம் ஆண்டு திமிரி கோட்டை பகுதியில் ஓர் ஐயப்பன் ஆலயம் அமைக்க ஏ.எஸ்.இராதாகிருஷ்ணன் என்ற அன்பர் முயற்சி செய்து வந்தார். பண வசதி இருந்தும் ஆலயம் முற்றுப் பெறாத நிலைமை. காரணத்தை அறிந்து கொள்ள வேலூர் சென்று திரு ஜெயஹரி என்பவரிடம் கந்தர் நாடி ஒலைச் சுவடியை பார்த்தார்.

கந்தர் நாடி ஒலைச் சுவடி காலக்கண்ணாடி போன்று லிங்கத்தை புதைத்த அரசவை மருத்துவரின் மறு பிறவியே அன்பர் திரு இராதாகிருஷ்ணன் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்து காட்டிற்று. மற்றும் பாஷாண லிங்கம் புதைக்கப்பட்ட குளத்தின் விவரத்தையும் எடுக்க வேண்டிய வழிமுறைகளையும் தெளிவுபடுத்திற்று.

யானை காலால் மிதிபட்டு இறந்த அதே ஆனைமல்லூரில் திரு இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறப்பு அமைந்தது குறிப்பிடத்தக்கது. 500 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைப்பட்டிருந்த பாஷாண லிங்கத்திலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கவும் நாடி வழிகாட்டியது. அதன்படி குற்றாலம் ஸ்ரீசெண்பகாதேவி ஆலயம் அருகில் உள்ள புற்றில் முத்து ஒன்று காணக்கிடைக்கும் என்றும், அதை எடுத்து வெள்ளி மோதிரம் ஒன்றில் பதித்து அதை அணிந்து கொண்டு பிறகு லிங்கத்தை எடுத்தால், கதிர்வீச்சின் பாதிப்பு இருக்காது என்றும் சொன்னது. அவ்வாறே தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டு திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் திமிரி கோட்டை சோமநாத ஈஸ்வரர் ஆலயத் திருக்குளத்தில் 32 அடி ஆழத்தில் புதைந்து கிடந்த பாஷாண லிங்கத்தை தேடும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். இம்முயற்சியில் அவரது ஆன்மிக நண்பர்களும் ஊர்ப் பொதுமக்களும் துணை நின்றனர்.

1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அந்த அதிசயம் நிகழ்ந்தது!. நம்பிக்கையுடன் பெருமுயற்சிகொண்டு தேடிய அன்பர் திரு இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தனது தர்ம கர்ம யோகத்தால் பூர்வ ஜென்ம பலனாக சுமார் 600 ஆண்டுகளாக குளத்தில் புதையுண்டுகிடந்த திமிரி பாஷாண லிங்கம் கிடைத்தது!.

இச்செய்திகள் யாவும் திருவாவடுதுறை ஆதினம் ஸ்கந்தர் மணிமாலை சதகம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குளிர்ந்த நீர் நிரம்பிய கண்ணாடிப் பேழையில் ஸ்ரீபாஷாணலிங்கேஸ்வரர் அமர்த்தப் பெற்று ஓலைச்சுவடியில் தெரிவித்த வண்ணம் ஆத்மார்த்தமான பக்தியோடு அருளாளர் திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக அபிஷேக ஆராதனைகள் செய்து வருகிறார்.

எத்தனை காலம் ஆனபோதிலும் ஆற்றல் குன்றாத சூரிய-சந்திரர்போல இந்த பாஷாண லிங்கேஸ்வரரின் பேராற்றல் தனித்தன்மையுடன் ஓங்கி நிற்கிறது. மருத்துவ முறைப்படியும், அகத்திய மகரிஷி அருளிய பட்டியல்படியும் சுத்தமான தண்ணீர், தேன், பால், விபூதி, சந்தனம் ஆகியவற்றை பாஷாண லிங்கத்தின் மீது சார்த்தி, அவற்றை முறையாக அருந்தி வர சரும, நரம்பு நோய்களும், ரத்த அழுத்தமும் தீர்கின்றன.

எல்லையில்லா பெருங்கருணை கொண்ட உலகநாயகனான அந்த வைத்திய நாதப்பெருமான் மனித குலத்தின் மீது கொண்ட அளவற்ற அன்பினால் இந்த கலியுகத்தில் திமிரியில் அமர்ந்து பிணி தீர்க்கும் பெரும்பணியைச் செய்து வருகிறார். நோயுற்ற அன்பர்கள் திமிரி இறைவனை ஒரு முறை தரிசனம் செய்து தீர்த்த பிரசாதத்தை அருந்தி வந்தால் நோய்கள் நீங்கி வாழ்வில் வளமும் நலமும் சேரும் என்பது திண்ணம். 

திருச்சிற்றம்பலம்.

குறிப்பு : ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று எல்லாம் வல்ல அருள்மிகு ஸ்ரீ சோமநாத  பாஷாண லிங்கேஸ்வரருக்கு அபிஷேக  ஆராதனைகள்  வெகு சிறப்பாக  நடைபெற்று  கொண்டிருக்கிறது.

தொடர்புக்கு :

திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள்,
அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் திருக்கோயில்,
திமிரி - 632512.
ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம்.
அலைபேசி எண் : 93447 30899.

Sri Somanadha Paashaana Lingeswarar Temple - Timiri  https://www.facebook.com/paashaanalingeswarar.timiri